சென்னை மாநகராட்சி தேர்தல்; பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்


சென்னை மாநகராட்சி தேர்தல்; பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்
x
தினத்தந்தி 4 Feb 2022 6:01 AM IST (Updated: 4 Feb 2022 6:01 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.




சென்னை,


பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் 200 வாா்டுகளில் 3,000 ஊா்க்காவல் படையினா் உள்பட மொத்தம் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறும்போது, வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (இன்று) முடிவடைகிறது. வேட்புமனுக்கள் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களில் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட உள்ளன. பிரசாரத்துக்கு வீடுவீடாக செல்லும்போது, 3 பேர் மட்டுமே முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஒரு வேட்பாளருக்கு 3 வண்டிகள்தான் பிரசாரத்துக்காக அனுமதிக்கப்படும் என கூறினார்.

சென்னையில், வரும் 11ந்தேதி வரை பேரணி, பொது கூட்டம் நடத்த அனுமதி இல்லை. தேர்தல் தொடா்பாக உள்அரங்கு கூட்டம் நடத்த அரங்கின் 50 சதவீத எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்படும்.

வருகிற 17ந்தேதிக்கு பிறகு கூடுதல் பறக்கும் படைக் குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவை கண்காணிக்கும் பொருட்டு இணையதள வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அல்லது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒரு நுண் பாா்வையாளா் நியமிக்கப்படவுள்ளனா் என்றாா்.

இதேபோன்று பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் கூறுகையில், சென்னை மாநகராட்சி 200 வாா்டுகளில் 5,794 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,061 வாக்கு சாவடிகள் பதற்றமானவை எனவும், 182 வாக்கு சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன.

பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 வாா்டுகளில் 3 ஆயிரம் ஊா்க்காவல் படையினா் உள்பட மொத்தம் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.


Next Story