நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு: நாளை பரிசீலனை
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. பிப்.7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.
சென்னை,
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் கடந்த 28ம் தேதி முதல் வருகிற 4ம் தேதி (இன்று) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவு அடைந்தது. தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 50,000 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 28ம் தேதி முதல் இன்று மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்த விண்ணப்பங்கள் அனைத்தும் நாளை காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும்.
வருகிற 7ம் தேதி (திங்கள்) மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை திருப்ப பெறலாம். அன்றைய தினம் மாலையே சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். வருகிற 19-ம் தேதி அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 22ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story