நாளை முதல் முன்பதிவின்றி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு தொடக்கம்
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நாளை முதல் முன்பதிவின்றி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நாளை முதல் முன்பதிவின்றி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக வெளிப்புற சிகிச்சைக்கு வருபவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் 50 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நோயாளிகள் பலரும் இந்த விவரம் தெரியாமல் ஜிப்மருக்கு நேரடியாக வந்து கடும் அவதியடைந்தனர். இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின.
நேரடியாக வரலாம்
இந்தநிலையில் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு முன்பதிவின்றி நேரடியாக வரலாம் என்று ஜிப்மர் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், தொற்று பரவுவதை தடுக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளுக்கு அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படுகின்றன. நோயாளிகள் முன்பதிவு இன்றி நேரடியாக வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வரலாம்.
தொலைபேசி ஆலோசனை
முன்பதிவு மற்றும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகள் நாளை முதல் நிறுத்தப்படும். நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் தேவையான அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
அதாவது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நோயாளிகள் மற்றும் உறவினர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் தடுப்பூசி ஒமைக்ரான் வகை மாறுபாட்டிற்கு எதிராக கூட பாதுகாப்பை அளிக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story