தூத்துக்குடியில் இருந்து காணாமல் போன மகனை தேடி 21 முறை புதுச்சேரி வந்த மூதாட்டி ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தார்
தூத்துக்குடியில் இருந்து காணாமல் போன மகனை தேடி 21 முறை புதுச்சேரி வந்த மூதாட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தார்.
புதுச்சேரி
தூத்துக்குடியில் இருந்து காணாமல் போன மகனை தேடி 21 முறை புதுச்சேரி வந்த மூதாட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தார்.
விபத்தில் சிக்கினார்
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது 70). இவரது மகன் ரவி (38). ஊரில் வேலையின்றி சுற்றி திரிந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார்.
இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ரவி புதுச்சேரி வந்துள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மகனைதேடி...
இதைத்தொடர்ந்து தனது மகனை தேடி பேச்சியம்மாள் புதுச்சேரி வந்துள்ளார். அரசு ஆஸ்பத்திரிக்கும் வந்து விசாரித்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவ்வப்போது புதுச்சேரி வந்து மகனை பல இடங்களில் தேடியுள்ளார். புதுவையில் உள்ள காவல் நிலையங்களிலும் மகனின் படத்தை காண்பித்து கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். இருப்பினும் மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ரங்கசாமியிடம் மனு
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தெரிவிக்குமாறு மூதாட்டியிடம் சிலர் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டமன்ற வளாகத்தில் சந்தித்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
மகனை தேடி இதுவரை 21 முறை புதுச்சேரி வந்துள்ளதாகவும், ரூ.60 ஆயிரம் வரை செலவழித்திருப்பதாகவும் பேச்சியம்மாள் நிருபர்களிடம் கூறினார். சிலர் அவருக்கு உதவிடும் நோக்கில் பணம் கொடுத்தபோது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். என்னிடம் பணம் உள்ளது, எனக்கு எனது மகன் தான் வேண்டும் என்று வேதனையுடன் கூறியது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.
Related Tags :
Next Story