பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதே தலையாய பணி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதே தலையாய பணி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
x
தினத்தந்தி 5 Feb 2022 9:50 PM IST (Updated: 5 Feb 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதே தலையாய பணி என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 7 பக்க அறிக்கை அளித்திருப்பது வேடிக்கை கலந்த வினோதமாக இருக்கிறது. 

சமூகநீதியில் தமிழ்நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க.வையும் அழைத்தார் மு.க.ஸ்டாலின். இடஒதுக்கீட்டை முதலில் 25 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தியதே எங்கள் தலைவர் கருணாநிதி தான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்த அ.தி.மு.க. துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. 

அதனைச் செயல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அப்போது இருந்த பிரதமர் வி.பி.சிங்குக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. 

விளிம்பு நிலை மக்களை கைதூக்கி விட பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக உயர்த்தி, பழங்குடியினருக்கு 1 சதவீதம் தனியாக கொடுத்து - இன்றைக்கு உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்தியாவிற்கே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சி.

அந்த 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு மண்டல் தீர்ப்பால் ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன் அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து, சட்டப் பாதுகாப்பு கொண்டுவர வைத்தது கருணாநிதியும், தி.மு.க.வும், திராவிடர் கழகமும் தான் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டாட்சித் தத்துவத்திற்காக ராஜமன்னார் குழு அமைத்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் மத்திய அரசு “மத்திய – மாநில உறவுகள்” குறித்து சர்க்காரியா கமிஷன் அமைக்க வழிவகுத்தது தி.மு.க. தான். ஆனால் அ.தி.மு.க.விற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதமே சாட்சியமாக நிற்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் போது தமிழ்நாட்டின் கடன் ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல். அப்படி கடன் வாங்கி – ஊழல் செய்து தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக்கி விட்டுப் போனவர்கள், 10 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் நிதி சுதந்திரத்தைப் பெற முடியாதவர்கள் இன்றைக்கு தி.மு.க. மீது பழி போட முனைவதைப் பார்த்தால், ‘கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்’ என்று தொடங்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையாமல் இருப்பது அ.தி.மு.க.வின் விருப்பம். ஆனால் “நீட் தேர்வு ரத்து” போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினைப் பார்த்து சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூட்டப்பட்ட மிக முக்கியமான நீட் கூட்டத்திற்கு கூட வராமல் போனது “ஊருக்கு உபதேசம்” என்ற இன்னொரு பழமொழியை நினைவுபடுத்துகிறது.

மு.க.ஸ்டாலினை விமர்சித்தால் மட்டுமே தங்களுக்குப் பிழைப்பு என்று இருப்பவர்கள், சமூகநீதி கூட்டமைப்பில் இணைய மாட்டோம் என்பதில் வியப்பும் இல்லை; கடிதம் எழுதுவதில் புதிரும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு, தங்கள் பழவினையால், சமூகநீதி - சமத்துவ விரோத பா.ஜ.க.வுக்குப் பல்லக்குத் தூக்குவதே தலையாய பணியாக இருப்பதைத்தான் அவரது அறிக்கை உணர்த்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story