அம்பத்தூரில் நள்ளிரவில் ஆட்டோவில் வந்து 4 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள்


அம்பத்தூரில் நள்ளிரவில் ஆட்டோவில் வந்து 4 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள்
x
தினத்தந்தி 7 Feb 2022 12:18 AM IST (Updated: 7 Feb 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் நள்ளிரவில் குடிபோதையில் ஆட்டோவில் வந்த ரவுடிகள், அடுத்தடுத்து பொதுமக்கள் 4 பேரை அரிவாளால் வெட்டினர். இதில் ஒருவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 53). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர், அரிவாளால் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

மேலும் அவர்கள், அதே பகுதியில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஸ்ரீராம் என்பவரது கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் புண்ணியகுமார் (50) என்பவரின் தலையிலும், பிரபாகரன் (30) மற்றும் வினோத் குமார் (35) ஆகிய 2 பேரின் கையிலும் அரிவாளால் வெட்டினர். இதில் காயம் அடைந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

ரவுடி கைது

இது குறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் 2 பேர் கத்தியுடன் சுற்றுவது தெரிந்து அங்கு சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில் பிடிபட்டவர், அம்பத்தூர் கள்ளிக்குப்பம், முருகம்பேடு பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (30) என்பதும், ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து குடிபோதையில் ஆட்டோவில் வந்தபோது மாணிக்கம் உள்பட 4 பேரையும் அரிவாளால் வெட்டியதும், கார் கண்ணாடியை உடைத்ததும் தெரிந்தது. கணேஷ் குமாரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

Next Story