இரவில் வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை கொன்று எஜமானரின் குடும்பத்தையே காப்பாற்றிய நாய்


இரவில் வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை கொன்று எஜமானரின் குடும்பத்தையே காப்பாற்றிய நாய்
x
தினத்தந்தி 7 Feb 2022 1:23 AM IST (Updated: 7 Feb 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இரவில் வீ்ட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை கொன்று எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது

புதுச்சேரி
புதுவையில் இரவில் வீ்ட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை கொன்று எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

வெளிநாட்டு நாய்கள்

மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரமணி. கல்வித்துறை அதிகாரி. இவரது மனைவி சித்ரா. இவர் குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களது வீட்டில் ராட் வீலர் வகையை சேர்ந்த 2 வெளி நாட்டு நாய்களை வளர்த்து வந்தனர். அவற்றுக்கு லெனி, மிஸ்ட்டி என பெயரிட்டு அழைத்தனர். 
வீட்டை சுற்றி மதில்சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில் இரவு வேளையில் பாதுகாப்புக்காக நாய்களை கட்டிப்போடாமல் அவிழ்த்து விட்டு விடுவது வழக்கம். இதனால் அவை காம்பவுண்டு சுவருக்குள் சுற்றி வரும்.
இந்தநிலையில் மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு  ஏற்பட்டது. முகம் வீங்கியும் மிகவும் சோர்வுடனும் காணப்பட்டது. இதனால் ரமணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 
இதையடுத்து அந்த நாய்க்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் நாய் சோர்வுடனே இருந்து வந்தது. 

கண்ணாடி விரியன் பாம்பு

இந்தநிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று ரமணி பார்வையிட்டார். அங்கு பயன்படுத்தாமல் கிடந்த தேங்காய் நார் மெத்தையில் சுமார் 3 அடி நீளமுள்ள      கண்ணாடி விரியன்   பாம்பு   செத்து கிடந்தது. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் செல்ல வந்த அந்த பாம்புடன் மிஸ்ட்டி போராடி கொன்று இருப்பதும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணமும் அப்போது தான் அவருக்கு தெரியவந்தது.
உடனே அந்த நாயை புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது நாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

‘விபரீதமாகி இருக்கும்

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘பொதுவாக கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால் விஷம் ரத்தத்தில் கலந்து ஒரு சில மணி நேரங்களில் கடி பட்டவர்கள் உயிரிழந்து விடுவார்கள். நாயின் மூக்கு பகுதியில் பாம்பு கடித்ததால் விஷம் ரத்தத்தில் கலக்கவில்லை. அதனால் நாய் உயிர் பிழைத்தது’ என தெரிவித்தனர். நாயை   வளர்த்த ரமணி கூறுகையில், ‘நாங்கள் வளர்க்கும் நாய்கள் வேட்டையாடும் வகையை சேர்ந்தது. வீட்டில் புகுந்த பாம்பை, நாய் கடித்து கொன்று விட்டது. நாங்கள் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த போது இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும். அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைந்து இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். அது நாயால் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நாய்கள் வீட்டிற்குள் ஒரு தவளை, பூரானை கூட நுழைய விடாது. நாய்க்கு அளித்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . இருப்பினும் அது முழுமையாக குணமடைந்தால் தான் எங்களுக்கு நிம்மதி’ என்றார். 
வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தடுத்து போராடி கொன்று தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story