தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கூறுவது தி.மு.க.வின் வேலை எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கூறுவது தி.மு.க.வின் வேலை எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Feb 2022 5:39 AM IST (Updated: 7 Feb 2022 5:39 AM IST)
t-max-icont-min-icon

தோ்தல் வரும்போது பொய்யான வாக்குறுதிகளை கூறுவது தி.மு.க.வின் வேலை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார்.

சாலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அவர், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பொய்யான வாக்குறுதிகள்

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வனவாசியில் நடந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசியதாவது:-

தி.மு.க.வினர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கி கொண்டிருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்கள். அதையெல்லாம் நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை நிறைவேற்றினார்களா?.

தேனீ, எறும்பு போல...

எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போது எல்லாம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிடுவார்கள். வெற்றி பெற்ற பிறகு மக்களை மறந்து விடுவார்கள். அ.தி.மு.க. அரசின் திட்டங்களைதான் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. பொங்கல் தொகுப்பில் கூட ஊழல் நடந்துள்ளது. இதை எல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேனீ, எறும்பு போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு, ஒவ்வொரு வீடு, வீடாக சென்று அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது.

மக்களுக்கு பாதுகாப்பான அரசு அ.தி.மு.க.

கட்டப்பஞ்சாயத்து மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட ஆட்சியை தி.மு.க. நடத்தி வருகிறது. அ.தி.மு.க. அரசு தான் மக்களுக்கு நன்மை செய்யும் அரசு. மக்களுக்கு பாதுகாப்பான அரசு. மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதை பயன்படுத்துவது நமது கடமை. இந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தலைவராக வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story