‘நீட்' தேர்வு எதிர்ப்பு மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு


‘நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 7 Feb 2022 5:47 AM IST (Updated: 7 Feb 2022 5:47 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ‘நீட்' தேர்வு எதிர்ப்பு மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப்போகிறோம் என்று காணொலி மூலம் நடந்த கோவை தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நல்லாட்சியின் இலக்கணம்

நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி” என்ற முழக்கத்தோடு நாம் தேர்தலை சந்திக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விடியலுக்கும், எதிர்காலத்துக்கும் தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான் சரியாக இருக்கும் என்று தொலைநோக்கு பார்வையுடன் வாக்களித்தார்கள்.

10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை வீழ்த்தி நம்மை தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர வைத்தார்கள். ஒரு ஆட்சி என்பது 5 ஆண்டு காலம். அந்த 5 ஆண்டு காலத்துக்குள் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும். இதுதான் நல்லாட்சியின் இலக்கணம்.

தலை சிறந்த ஆட்சி

ஆனால், ஆட்சிக்கு வந்து இன்னமும் ஓராண்டு காலம் கூட நிறைவடைவதற்கு முன்னரே, கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றி கொடுத்த ஆட்சியை தலைசிறந்த ஆட்சி என்றுதானே சொல்ல முடியும். அத்தகைய தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக நமது தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது.

பெரும்பான்மை பலத்தால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியை பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.

அனைத்து பகுதிகளும்வளர வேண்டும்

அந்த எண்ணத்தோடுதான் ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளரவேண்டும் - அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படும் ஆட்சி நமது ஆட்சி.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மத்திய அரசிடமும் நம்முடைய தமிழ்நாட்டுக்கான உரிமைகளை போராடியும், வாதாடியும் பெறுகிற இயக்கமாக, ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டின் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவைச் சிதைப்பதாக ‘நீட்' தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரை நாம் இழந்தோம்.

வலிமையோடு நிறைவேற்ற போகிறோம்

‘நீட்' தேர்வு என்பது பல லட்சம் கொடுத்து பயிற்சி மையங்களில் படிக்க வசதி உள்ள மாணவர்களுக்குத்தான் வசதியானது. முதல் ஆண்டு இடம் கிடைக்கவில்லையா? அடுத்த ஆண்டும் லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெறுகிறார்கள். இது எல்லா மாணவ, மாணவியராலும் முடியுமா? ஏழைகளால் முடியுமா? முடியாது. அரசு பள்ளியில் படிப்பவர்களால் முடியுமா? முடியாது.

‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார் என்று தெரிந்ததும், மறுநாளே அதாவது, நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக, நாளை தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது. மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்ற போகிறோம்.

முகமூடியை கழற்ற வேண்டும்

நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்கு பிறகு மீட்டு, சில பத்தாண்டுகளாகத்தான் பலரும் படிக்க தொடங்கியிருக்கிறார்கள். படித்தால் தானாக தகுதி வந்து வாழ்க்கையில முன்னேறிவிடுவார்கள். ஆனால் படிப்பதற்கே உனக்கு தகுதி வேண்டும் என்று தடுக்கும் பழைய சூழ்ச்சியின் புது வடிவம்தான் ‘நீட்'.

அதனால்தான் நாம் தொடர்ந்து ‘நீட்' தேர்வை எதிர்க்கிறோம். மருத்துவ படிப்புகளில் சேர்வதாலேயே யாரும் மருத்துவர் ஆகிவிட மாட்டார்கள். மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி அடைந்தால்தான் டாக்டர் ஆவார்கள். அப்படித்தான் உலகின் தலைசிறந்த டாக்டர்களாக நமது தமிழ்நாட்டு டாக்டர்கள் இருக்கிறார்கள். ‘நீட்' தேர்வை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. அதன் முகமூடியைக் கழற்றி பார்க்க வேண்டும்.

‘நீட்’ தேர்வை வைத்து அரசியலா?

வெறுமனே அரசியலுக்காக எதிர்க்கவில்லை. மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே, ‘நீட்' தேர்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இதோ இப்போது நாம் துணிச்சலோடு, கவர்னர் திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். ‘நீட்' எதிர்ப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம். ‘நீட்' மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.

ஒளி கொடுக்கும் ஆட்சி

மக்களை பற்றியே நித்தமும் சிந்திக்கிற தி.மு.க. அரசாங்கம் மாநில ஆட்சியை நடத்தி வரும் இந்த மகத்தான நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால், கோட்டையில் இருந்து உருவாக்கும் அனைத்து திட்டங்களும், அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் செல்லும். அனைத்து வீதிகளுக்கும், வீடுகளுக்கும் போய்ச்சேரும்.

விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல, தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story