அரசு பள்ளியை சமூக அமைப்பினர் முற்றுகை
மாணவி பர்தா அணிய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு பள்ளியை மாணவர் கூட்டமைப்பு, சமூக அமைப்பினர் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி பர்தா அணிய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு பள்ளியை மாணவர் கூட்டமைப்பு, சமூக அமைப்பினர் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பர்தா அணிந்து வர தடை
அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஒருவர் பர்தா அணிந்து வந்தார். இதனை தலைமை ஆசிரியை (பொறுப்பு) கோமதி, மாணவியை அழைத்து பள்ளிக்கு பர்தா அணிந்து வரக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.
மாணவி பர்தா அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு மற்றும் சமூக அமைப்பினர் அரசு உயர்நிலைப்பள்ளியை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
அரசு பள்ளி முற்றுகை
இதற்காக அவர்கள் இன்று அரியாங்குப்பம் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் அவர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் பள்ளிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஒரு சிலரை மட்டும் பள்ளிக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். அவர்கள் பள்ளிக் கல்வி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம், தலைமை ஆசிரியை கோமதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் குவிப்பு
அப்போது மாணவர்களிடம் பாகுபாடு கூடாது என்பதற்காக தான் பர்தா அணிந்து வருவதை தவிர்க்குமாறு கோரியதாகவும், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தலைமை ஆசிரியை விளக்கம் அளித்தார். இதில் சமாதானம் அடைந்த மாணவர் கூட்டமைப்பினர், சமூக அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க பள்ளி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story