கவர்னர் மாளிகை முன் மூதாட்டி போராட்டம்
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் போலீசை கண்டித்து கவர்னர் மாளிகை முன் மூதாட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டார்
புதுவை ரெயின்போ நகர் முதல் குறுக்குத்தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த மூதாட்டி மன்னா ஆனந்த் (வயது 63). கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் வீட்டின் உரிமையாளருக்கும், மன்னா ஆனந்துக்கும் இடையே வீட்டு வாடகை கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கும் கோர்ட்டில் உள்ளது.
இந்தநிலையில் மன்னா ஆனந்தின் வீட்டில் இருந்த பொருட்களை வீட்டின் உரிமையாளரின் தூண்டுதலின் பேரில் சிலர் வாகனத்தில் ஏற்றினர். இதை மன்னா ஆனந்த் தடுத்து நிறுத்தினார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் பொருட்களை எடுத்து சென்றனர்.
இதுதொடர்பாக மன்னா ஆனந்த் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர், தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், வீட்டிலிருந்த பொருட்களை மீட்டுத்தரக்கோரியும் தனது மகனுடன் கவர்னர் மாளிகை முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story