பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு உயரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை


பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு உயரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Feb 2022 4:41 AM IST (Updated: 8 Feb 2022 4:41 AM IST)
t-max-icont-min-icon

கேரளா, ஆந்திரா எல்லை மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது என்றும், பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு உயரும் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று முழு கவச உடை அணிந்து ஆய்வு செய்தார். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும், நோயாளிகளிடமும் கேட்டறிந்தார். ஆய்வின் போது ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சாந்திமலர் உடன் இருந்தார். இதையடுத்து நிருபர்களிடம் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஜனவரி 20-ந்தேதியொட்டி அதிகளவில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) 6 ஆயிரம் அளவில் குறைந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் 10 சதவீதத்துக்கு மேல் நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது. கேரளா எல்லையையொட்டி இருக்கும் மேற்கு மாவட்டங்களான, கோவை, தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து தனி கவனம் செலுத்தி கண்காணிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

4 சதவீத படுக்கைகள்

அதேபோல், ஆந்திரா எல்லையில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திலும், சுற்றுலா தலமான நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்திலும் தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக நோய் பாதிப்பு குறைந்து வருவதால், நோய் தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மளமளவென குறைந்து உள்ளது. கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட படுக்கைகளில், தற்போது 5 ஆயிரத்து 975 பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 சதவீத படுக்கைகள் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் பயன்பாட்டில் உள்ளது.

நோய் தொற்று குறைந்து வருவதால், நோய் பாதுகாப்பு யுக்திகளை பொதுமக்கள் பின்பற்றுவதே இல்லை. முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை நிறுத்திவிட்டனர். பொதுமக்கள் இதில் கவனக்குறைவாக இருந்தால், கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்றத்துக்கு வரும்.

1.6 கோடி பேர் தடுப்பூசி போடவில்லை

தடுப்பூசியை பொறுத்துவரை 9.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5.25 கோடி முதல் தவணை தடுப்பூசியும், 4.05 கோடி 2-வது தவணை தடுப்பூசியும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 26.72 லட்சம் முதல் தவணை தடுப்பூசிகளும், 5.47 லட்சம் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை 4.83 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சம் பேர் இன்னும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 76.67 லட்சம் பேரும், கோவேக்சின் தடுப்பூசி 36.73 லட்சம் பேரும் போடாமல் உள்ளனர்.

பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் 3-வது அலையில், உயிரிழப்பு அதிகளவில் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னுயிர் காப்போம்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் இறப்பின் சதவீதம் குறைந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 313 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 84.73 சதவீதம் பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 15.27 சதவீதம் பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.13.40 கோடி நிதி உதவி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story