தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதில் எப்படி தலையிட முடியும்? ஐகோர்ட்டு கேள்வி


தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதில் எப்படி தலையிட முடியும்? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 8 Feb 2022 4:45 AM IST (Updated: 8 Feb 2022 4:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதில் எப்படி தலையிட முடியும்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, மண்டல வாரியாக இல்லாமல், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் ஜனவரி 17-ந்தேதி வார்டு ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

எப்படி தலையிட முடியும்?

இந்த வழக்கிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின் அதில் எப்படி ஐகோர்ட்டு தலையிட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து, மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார்.

தீர்ப்பு

சென்னை மாநகராட்சி தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி, ‘‘வார்டு மறுவரையறை செய்து 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், இப்போது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்பே வழக்கு தொடர்ந்து இருந்தால், மீண்டும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டிருக்கும்’’ என்று வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Next Story