“மாநிலங்களுக்கு கவர்னர் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்-அமைச்சர் முன்னெடுக்க வேண்டும்” - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.


“மாநிலங்களுக்கு கவர்னர் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்-அமைச்சர் முன்னெடுக்க வேண்டும்” - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 8 Feb 2022 12:10 PM IST (Updated: 8 Feb 2022 12:10 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா கூறியதை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டினார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, மாநிலங்களுக்கு கவர்னர் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்-அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது;-

“சட்டமன்றத்தில் இருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கவர்னர் என்பவர் மத்திய அரசால் இங்கே அனுப்பப்பட்டவர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளுக்கு இப்படி கவர்னர்கள் எல்லாம் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதை உணர்ந்து தான் பேரறிஞர் அண்ணா, ‘ஆட்டுக்கு தாடி தேவையில்லை, நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை’ என்று குறிப்பிட்டார்.

கலைஞர் கருணாநிதி, முதல் முறையாக முதல்-அமைச்சர் ஆன போது ராஜமன்னார் குழுவை அமைத்தார். அந்த குழுவினர் தங்களுடைய பரிந்துரையில், ‘கவர்னர் என்பவர் மத்திய அரசின் முகவராக இங்கே செயல்படக்கூடாது’ என்று தெளிவாக தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமல்ல, 1974 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சம்ஷீர் சிங் வழக்கில் 7 நீதியரசர்கள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘கவர்னரின் அதிகாரம் இங்கிலாந்து மன்னரை போன்றது அல்ல, சட்டமன்றங்களின் அதிகார வரையறைக்கு உட்பட்டும், மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு உட்பட்டும் தான் கவர்னர் செயல்பட முடியும்’ என மிகத்தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தழைத்தோங்கி வரும் சமூக நீதி, இந்தியா முழுவதும் செழித்தோங்க வேண்டும் என்பதற்காக ஒரு இயக்கத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். அதனை நெஞ்சார வரவேற்கின்றோம். 

அதே போல, இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு கவர்னர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்-அமைச்சர் முன்னெடுக்க வேண்டும். அது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story