சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நாளை முதல் இரவில் வாகனங்கள் செல்ல தடை


சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நாளை முதல் இரவில் வாகனங்கள் செல்ல தடை
x

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவில் வாகன செல்ல தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சொக்கலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகளும் உள்ளன. இந்த சரணாலயத்தின் வழியே பெங்களூரு செல்லும் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் அடிக்கடி இறக்கின்றன. இந்த சாலையில் 24 மணி நேரமும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் என தினமும் 5 ஆயிரம் வாகனங்கள் வரை செல்கின்றன.

வாகனங்களுக்கு தடை

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 8 சிறுத்தைகள், ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 155 வன விலங்குகள் வாகனங்கள் மோதி இறந்துள்ளன. எனவே மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகன போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விலங்குகள் இறப்புக்கு பொறுப்பு

அப்போது வனத்துறை தரப்பில், “இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த உத்தரவை மக்களின் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தவில்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் அமைதி கூட்டம் நடத்தி சுமுக தீர்வு காண ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “மாவட்ட கலெக்டரின் உத்தரவை அமல்படுத்தாததால் ஏற்பட்ட வன விலங்குகளின் இறப்புக்கு வனத்துறை அதிகாரிகளை ஏன் பொறுப்பாளியாக்கக்கூடாது?” என கேள்வி எழுப்பினர்.

விளக்கம் வேண்டும்

பின்னர் “வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கவே வனத்துறை அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். அத்துடன் கலெக்டர் உத்தரவை இதுவரை ஏன் அமல்படுத்தவில்லை? என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story