இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Feb 2022 4:40 AM IST (Updated: 9 Feb 2022 4:40 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

இலங்கை கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய மீனவர்கள் 3-வது முறையாக கைது செய்யப்பட்டு இருப்பதை பிரதமரின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இச்சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7-ந்தேதி (நேற்று முன்தினம்), 3 மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கை மயிலாட்டி கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

29 மீனவர்கள், 79 படகுகள்

தமிழ்நாட்டை சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவது குறித்து பலமுறை மத்திய அரசிடம் முறையிட்டு வருகிறோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும் சேர்த்து, இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை காவலில் உள்ளனர். மேலும் அவர்களின் 79 மீன்பிடி படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளது.

இது தவிர, இரு நாட்டு மீனவர்களிடையே நிலவும் பதற்றமான நிலைமை, இலங்கை அரசால் தமிழ்நாடு மீன்பிடி படகுகளை ஒருதலைபட்சமாக ஏலம் விடுவது மற்றும் இலங்கையை சார்ந்த சிலரால் நமது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான சில தீவிரமான பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டி, சமீபத்தில் தங்களுக்கு (பிரதமருக்கு) நான் கடிதம் எழுதியிருந்தேன்.

தூதரக அளவில் முயற்சிகள்...

தங்களிடம் (பிரதமர்) மீண்டும் மீண்டும் நான் வைத்த கோரிக்கைகளின் மூலம் தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு ஏற்றதொரு நல்ல மாற்றம் வரும் என்று நம்பினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இதுவரை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே, இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண தூதரக அளவில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்கள் இதுபோன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் எண்ணற்ற நிகழ்வுகளைத் தடுத்திட இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். தமிழக மீனவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்படுவதும், இதுபோன்று கைது செய்யப்படுவதும், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் அவர்களது பாரம்பரிய உரிமையைப் பறிப்பதாகும்.

உடனடி நடவடிக்கை தேவை

இது நமது ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமல்லாமல், கடலில் தமிழக மீனவர்களின் உயிருக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலுடன், பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் அவர்களின் உரிமைக்கு சவால் விடுவது போன்றதாகும்.

சமீப காலமாக நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள், அப்பகுதியின் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் மாறுதல்களை ஏற்படுத்தி வருவதால், இப்பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எனவே, பிரதமராகிய நீங்கள் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 29 மீனவர்களையும், அவர்களது 79 மீன்பிடி படகுகளையும் விடுவித்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story