நெல் கொள்முதல்; ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை
நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 30 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்ததாகவும், இதனை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக அமைச்சர் சக்கரபாணியை தொடர்பு கொண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தவறு எங்கு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் சென்று பார்வையிட்டதாக தெரிவித்துள்ள அவர், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை 10 ரூபாயாக உயர்த்தியதோடு, பருவகால பட்டியல் எழுத்தாளர்களுக்கு தினப்படியாக 120 ரூபாய் மற்றும் பருவகால உதவுபவர்கள், காவலர்கள் ஆகியோருக்கு தினப்படியாக 100 ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண் மூலம் விவசாயிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் குறிப்பிட்டுள்ள அவர், தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேளாலரிடம் அறிவுறுத்தியதாகவும், இதை வலியுறுத்தி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story