புதுவை அரசு கேட்கும் திட்டங்களை நிறைவேற்றி தருவோம் மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் உறுதி
புதுவை அரசு கேட்கும் திட்டங்களை நிறைவேற்றி தருவோம் என்று மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் கூறினார்.
புதுச்சேரி
புதுவை அரசு கேட்கும் திட்டங்களை நிறைவேற்றி தருவோம் என்று மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் கூறினார்.
மத்திய ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி பிரகலாத் சிங் படேல் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேரடி மானியம்
புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தில் மகத்தான வெற்றியாக 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொலைநோக்கு கொள்கைகளின் விளைவாக கடினமான சவால்களை சந்திக்கக்கூடிய வினியோக முறையானது மிகவும் சிறப்பாக செயல்பட்டது. ஜன்தன் யோஜனாவின் மூலமாக ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கை தொடங்கி, அரசின் மானியங்களை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதை சாத்தியமாக்கியது.
மேலும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கியதில் அரசு வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்களும் தேவைக்கு ஏற்ப நாடு முழுவதும் அனுப்புவதற்கான சரியாக திட்டமிடப்பட்டது. தெளிவான செயல்முறை திட்டமிடப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறையையும் எளிதாக சாத்தியமாக்கியது.
நதிநீர் இணைப்பு
பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், சரக்கு போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு என 7 துறைகள் உள்ளடங்கியுள்ளன. எங்களது குறிப்பிடத்தக்க சாதனைகளில் நதிநீர் இணைப்பும் அடங்கும். பிரதமரின் மன உறுதியின் பலனாக தண்ணீர் அதிகம் உள்ள படுகையையும், பற்றாக்குறை படுகையையும் இணைக்கும் திட்டமானது சாத்தியப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கேன் பேத்வா நதிநீர் இணைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்துக்கு ரூ.44 ஆயிரத்து 605 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். மேலும் 103 மெகாவாட் நீர் மின்சார தயாரிப்பு மற்றும் 27 மெகாவாட் சூரிய மின்சக்தியும் தயாரிப்பதற்கான திட்ட வரைமுறைகள் செய்யப்பட்டுள்ளன. 5 நதிநீர் இணைப்பு திட்டங்கள் இந்த ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி இணைப்பு திட்டங்களும் அடங்கும்.
மாநிலங்களுடன் உடன்படிக்கை
இந்த திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கு மாநிலங்களுடன் உடன்படிக்கை செய்யப்படும். இந்த நிதியாண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகமே இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு பொருட்களை ருசிக்க விரும்புகிறது. இதனை கருத்தில்கொண்டு, தற்போது மத்திய அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பெயருடன் அதன் பொருட்களும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைய வழிகளும் வாய்ப்புகளும் உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.1,022 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களின் தரத்தை உயர்த்துவதற்காக அரசு பல உதவிகளை செய்து வருகிறது.
புதுவை அரசு திட்டங்கள்
புதுவையில் வாழ்ந்த மகான் அரவிந்தர் ஒரு கருத்தை மனதில் கொண்டிருந்தார். உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக எப்படி வாழமுடியும் என்று அவர் நினைத்து அதை ஆரோவில் வடிவில் அமைத்து முழு உலகிற்கும் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அவரது அடிச்சுவட்டை பின்பற்றி உணவு பதப்படுத்துதல் துறையில் முழு உலகிற்கும் எங்களின் கதவுகளை திறக்க விரும்புகிறோம். மேலும் இந்தியாவை உலகம் முழுவதும் இணைக்கக்கூடிய தென்னிந்தியாவின் தெற்கு நுழைவு வாயிலாக புதுச்சேரியை பார்க்கிறேன்.
புதுச்சேரி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாநிலம். இங்கு மத்திய அரசின் திட்டங்கள் 100 சதவீத நிதி பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டு வருகிறது. புதுவை அரசு எந்த ஒரு திட்டத்தை மத்திய அரசுக்கு அளித்தாலும் அதை நிறைவேற்றி தருவோம். கடந்த ஆண்டுகளில் ஒதுக்கியதை விட அதிக அளவாக ஜல்சக்தி திட்டத்தில் புதுவைக்கு ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளோம்.
மேகதாது அணை
இந்த நிதியை நீரின் தரத்தை மேம்படுத்துவது உள்பட இதர திட்டங்களுக்கு ஒதுக்குவோம். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகமும், தமிழகமும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வந்தால்தான் மத்திய அரசு அனுமதி அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
இதைத்தொடர்ந்து மத்திய பட்ஜெட் குறித்து தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த வல்லுனர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத்சிங் படேல் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது கதி சக்தி திட்டத்தில் 25 ஆயிரம் கி.மீ. சாலை, 2 ஆயிரம் கி.மீ. ரெயில்வே பாதைகள், விமான நிலைய பணிகள், ரோப்கார் திட்டங்கள் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் பல திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் புதுச்சேரி வந்தார். அவரை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம், அசோக் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அவர்கள் புதுவையில் நிலவும் அரசியல் நிலை குறித்து விளக்கினார்கள். தங்கள் தொகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்கள். சிவசங்கரன் எம்.எல்.ஏ. தனது தொகுதியில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர்களது கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் வாரிய தலைவர் பதவி விவகாரத்தில் வருகிற 15-ந்தேதிக்கு மேல் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசவும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.
===
Related Tags :
Next Story