சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அறவழி போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அறவழி போராட்டம் நடைபெற்றது.
அறவழி போராட்டம்
திருவண்ணாமலையை அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தின் 50-வது நாளான நேற்று காலை முதல் மாலை வரை பாலியப்பட்டு கிராம மக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பாலியப்பட்டு கிராம பொதுமக்கள், விவசாய மக்கள் இயக்கம், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு, கவுத்தி, வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, உயர்மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் குட்டி, சம்பத், அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
பாலியப்பட்டு பகுதியில் சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அகில இந்திய விவசாயிகள் மகா சபை (ஏ.ஐ.கே.எம்.) மாநில பொது செயலாளர் சந்திரமோகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், பாண்டியன், முன்னாள் மாநில துணை பொது செயலாளர்கள் காளிதாஸ், பிரசாத், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் அபிராமன், கவுத்தி, வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் அழகேசன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் வக்கீல் முத்தையன் ஆகியோர் கலந்துகொண்டு அறவழி போராட்டம் குறித்து பேசினர்.
அப்போது சிப்காட் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிப்காட் அமைக்க அரசு மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்.
விவசாய நிலங்களை எடுக்காமல் அரசு நிலங்களில் சிப்காட் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story