மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப், 5 பாதிரியார்கள் ஜாமீன் மனு தள்ளுபடி


மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப், 5 பாதிரியார்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 10 Feb 2022 1:23 AM IST (Updated: 10 Feb 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப்-5 பாதிரியார்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ‘எம்.சாண்ட்’ குவாரி நடத்துவதற்கு கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால், சட்ட விரோதமாக ஆற்று மணலை எடுத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நிலத்தின் உரிமையாளரான கேரள மாநிலம் கோட்டயம் கத்தோலிக்க பாதிரியாரான மனுவேல் ஜார்ஜ் என்பவர் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அப்போதையை உதவி கலெக்டர் பிரதீப் தயாள் ரூ.9½ கோடி அபராதம் விதித்தார். மேலும், மணல் கொள்ளையில் உடந்தையாக இருந்த கனிமவள உதவி இயக்குனரின் கணவர் முகமது சமீர் என்பவரும் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

பிஷப்-பாதிரியார்கள் கைது

இந்த வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கேரளா மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க டயோசீசன் பிஷப் சாமுவேல் மாரி எரேனியஸ், பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலா, ஜோஸ் கலவியால் ஆகிய 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

கொரோனா பாதிப்பு

பின்னர் அவர்களை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பிஷப் சாமுவேல் மாரி எரேனியஸ், பாதிரியார் ஜோஸ் சமகாலாவும் தங்களுக்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதாக கூறினார்கள். உடனே அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 பாதிரியார்களும் நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாதிரியார் ஜோஸ் சமகாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த நிலையில் கைதான பிஷப் மற்றும் பாதிரியார்கள் 5 பேரும் ஜாமீன் கேட்டு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நேற்று இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) கடற்கரை, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story