பெட்ரோல் குண்டு வீச்சு: தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சென்னையில் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னதாக அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், அலுவலகத்தின் தரை பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், கர்த்தா வினோத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தை தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் தடயங்கள் சேகரிக்கவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பாகவும் சம்பவ இடத்தை காவல்துறை சுத்தப்படுத்தியது ஏன்?.
நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. கைதான நபருக்கு நீட் என்பது என்னவென்று கூட தெரியாது. என்னுடைய தொலைபேசி தமிழக உளவுத்துறையால் ஒட்டுக் கேட்கப்படுகிறது. ஒரு சிலர் தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். வாக்குமூலத்தை வைத்து மட்டுமே போலீசார் முடிவுக்கு வர கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story