மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் ரங்கசாமி வழங்கினார்
மாணவ, மாணவி களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி
மாணவ, மாணவி களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
மாத்திரைகள்
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில், 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 10-ந் தேதி, ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி திலாஸ்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் மருத்துவ அதிகாரி தமிழரசி வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டச்சத்து குறைபாடு
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10-ந் தேதி, ஆகஸ்டு 10-ந் தேதி தேசிய குடற்புழு நீக்கநாள் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் 1 வயது முதல் 19 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்து 71 ஆயிரத்து 466 பேருக்கு மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளிலும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மூலமாக வீடுகளிலும் வழங்கப்படும். இந்த மாத்திரை ஆண்டுக்கு 2 முறை வழங்கு வதால் ரத்தசோகை பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும். ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கப்படும். இன்று (நேற்று) பள்ளிகளில் விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 17-ந் தேதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ஆனந்தலட்சுமி, முரளி, ராஜாம்பாள், ரகுநாதன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்கால்
காரைக்கால் தோமாஸ் அருள் வீதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா மாணவர் களுக்கு மாத்திரைகளை வழங்கினார்.
===
Related Tags :
Next Story