தமிழகத்தில் இனிமேல் தி.மு.க. ஆட்சிதான் நிரந்தரமாக இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் இனி நிரந்தரமாக தி.மு.க. ஆட்சிதான் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலுக்காக, இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் அல்ல, மக்களுக்கு எந்நாளும் நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்காக உருவான இயக்கமல்ல தி.மு.க.
தமிழர்களின் இன உரிமையை மீட்பதற்காக, தமிழ்மொழியைக் காப்பதற்காக, தமிழ்நாட்டை இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக, அனைத்து வளங்களும் கொண்ட தமிழ்நாடாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் தி.மு.க., தேர்தலுக்காக உருவான இயக்கம் என்றால் கட்சி ஆரம்பித்த உடனேயே நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பங்கெடுத்திருப்போம்.
1967-ம் ஆண்டு முதல் இன்று வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலம் என்பது நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கும் பொற்கால ஆட்சியாகத்தான் அமைந்துள்ளது. இனியும் அப்படித்தான் அமையும். இனித் தமிழகத்தில் நிரந்தரமாகத் தி.மு.க. ஆட்சிதான் இருக்கும் என்றநிலையை உருவாக்குவோம். இது ஏதோ நான் முதல்-அமைச்சராகத் தொடர வேண்டும் என்பதற்காகவோ, சிலர் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. தி.மு.க.தான் தமிழ் மண்ணில், இம்மண்ணின் மணத்துடன், குணத்துடன், நிறத்துடன், உணர்வுடன் உருவான இயக்கம்.
தமிழ்நாட்டுக்கு எது தேவை, தமிழ் மக்களுக்கு எது வேண்டும், தமிழர்களின் பண்பாட்டுக்குப் பொருத்தமானது எது என்பதை உணர்ந்த இயக்கம் நம்முடைய தி.மு.க.தான். இது தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுக்கு நன்கு தெரியும். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் இருப்பது ஒரு ரத்த பந்தம். அதனை யாராலும் பிரிக்க முடியாது.
நான் சுயநலமாகச் சிந்திக்கிறேன் பேராசைப்படுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். நாம் பொதுமக்களின் நன்மைக்காகத்தான் இதைச் சொல்கிறேன். தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. நல்ல பல திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. இனியும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரப்போகிறது. இந்த நன்மைகள் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அதற்கு உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக, கூட்டணிக் கட்சியினராக இருந்தால்தான் அது முறையாக சிறப்பாகச் சென்றடைய எளிதாக இருக்கும்.
எதிர்க்கட்சி வேட்பாளர் வந்தால், மக்களை மறந்து தேவையற்ற அரசியல் செய்யத் தொடங்குவார். மக்களுக்கு நன்மைகள் போய்ச்சேராத வகையில் தடுக்கப் பார்ப்பார்கள், இடையூறுகளை ஏற்படுத்த முயல்வார்கள். எனவேதான் அனைவருமே நம்முடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற வேண்டும் என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மக்களால் தோற்கடிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்த பழனிசாமி, தனது அவல ஆட்சியின் தோல்வியை மறைக்க, தானும் தனது அமைச்சர்களும் ஊழல்களை மறைக்க, தினம் ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இவரது பொய் சொல்லும் குணத்தைப் பார்த்து மக்கள் இவரை பச்சைப் பொய் பழனிசாமி வருகிறார் என்றுதான் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
“தி.மு.க. ஆட்சி... தி.மு.க. ஆட்சி..." என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமியும் - ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் ‘நீட்' தேர்வு நடந்ததென்று சொல்லத் திராணி உள்ளதா?
ஈரோடு மாவட்டம் என்பது தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்தாக வேண்டும். ஈரோடு என்பது திராவிட இயக்கத்தின் தாய் வீடு. பெரியார் பிறந்த ஊர். அண்ணா வாழ்ந்த ஊர். நம்முடைய தலைவர் கருணாநிதி பயின்றதும் ஈரோட்டில்தான். அப்படிப்பட்ட ஈரோட்டுக்கு இப்போது என்ன பெருமை தெரியுமா?.
இப்போது ஈரோட்டு அரசியல்தான் இன்று இந்திய துணைக்கண்டம் முழுவதும் நடக்கிறது. பெரியாரின் சமூகநீதிதான் இன்று உத்தரபிரதேச அரசியலில் எதிரொலிக்கிறது. நாட்டில் இன்றைக்கு மதவாதத்துக்கு எதிர்ச்சொல் பெரியார்தான். அதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றிவைத்த சமூகநீதி தீபம்தான்.
இந்த மாபெரும் தலைவர்களின் வழியைப் பின்பற்றி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை மருத்துவக் கல்வியில் உறுதிசெய்தது தி.மு.க.தான்.
இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிறார்கள். தி.மு.க.வை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். அந்த பெருமையோடுதான் பெரியார் மண்ணில் அமர்ந்துகொண்டு இருக்கும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அதே உணர்வோடு ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றியை வாரி வழங்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story