‘சி.பி.ஐ. விசாரணை தேவை’ அண்ணாமலை அறிக்கை
பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை தியாகராயநகரில் பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
மதுரையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, மாநில தலைவர் அண்ணாமலை, நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக சென்னைக்கு வந்து தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கதவு மற்றும் தீப்பற்றிய இடங்களை கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தார்.
பின்னர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த, காவல் துறை அதிகாரிகள் செய்த முதல் வேலை தண்ணீர் விட்டு தடயங்களை அழித்து உள்ளனர். தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தவில்லை, தடயங்கள் எதுவும் சேகரிக்கப்பட வில்லை, முதல் தகவல் அறிக்கையும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. விசாரணையை நடத்தி முடிப்பதற்குள் ஒரு நபரை கைது செய்ததாகவும், ஆரம்பக்கட்ட விசாரணையில் நீட் தேர்வு பிரச்சினைக்காக அவர் இந்த காரியத்தை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ஒரே நாள் இரவில் சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. அதேபோல், திரு.வி.க. நகரில் தேர்தல் பணிமனை சேதப்படுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் பா.ஜ.க. வேட்பாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் வேலூரிலும் பா.ஜ.க. அலுவலகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் நடந்திருக்கும் இந்த சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கமலாலயத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் தொடர்பாக அனைத்து கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
எனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது. கமலாலயத்தில் முன்பு தெருவின் 2 பக்கமும் போடப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தாக்குதல் நடந்துள்ளது. எனது போன்கள் முழுமையாக ஒட்டு கேட்கப்படுகிறது. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள முடியாமல் வன்முறையால் எதிர்கொள்ள பார்க்கிறார்கள். இதற்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இதற்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல நாங்கள். தொடர்ந்து ஆதாரங்களுடன் அரசின் குறைகள் சுட்டிக்காட்டப்படும்.
ஏற்கனவே 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தான் இதேபோல் குண்டு வீசப்பட்டது. இப்போதும் அதேபோல் தி.மு.க. ஆட்சியில்தான் பா.ஜ.க.வுக்கு எதிரான இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
பேட்டியின்போது பா.ஜ.க. மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், துணைத்தலைவர் எம்.என்.ராஜா, சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி, கோழைத்தனமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சம்பவம் நடைபெற்றவுடன் மிக விரைவாக செயல்பட்ட காவல்துறை, முதல் தகவல் அறிக்கையை பதியும் முன்னரே, தடயவிய நிபுணர்களைக் கூட அழைக்காமல் அவசர அவசரமாக குற்ற நிகழ்ந்த இடத்தை தூய்மைப்படுத்தி இருக்கிறார்கள்.
எதற்காக ஆதாரங்களை எல்லாம் அழிக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டது? குற்றவாளிகள் யார் சொல்லி இதை செய்தார்கள்? என்று தெரியவேண்டும். இதையெல்லாம் தனிமனிதர் செய்ய வாய்ப்பில்லை. இதற்குப்பின் உள்ள மிகப்பெரிய சதியைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவேதான் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என கோருகிறோம்.
தி.மு.க. ஆட்சியில் மக்களைவிட சமூக விரோதிகள் நலமாக இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கும் தமிழகத்தில் கண்மூடிப்போனது. காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டு விட்டது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பா.ஜ.க. மிகப்பெரிய எழுச்சியை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெற்றுள்ளது பலரின் கண்களை உறுத்துகிறது.
பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டிருக்கும் நபர் காவல்துறையின் குற்ற பட்டியலில் உள்ள நபர் என்றும், சமீபத்தில்தான் அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. ‘நீட்’ தேர்வில் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை எதிர்த்து கண்டிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. விசாரணை தொடங்கும் முன்னரே எப்படி அதன் போக்கை தீர்மானிக்க முடிகிறது, சாட்சியங்களைக் கலைக்க முடிகிறது?
இதேபோலத்தான் அரியலூர் மாணவி லாவண்யா வழக்கிலும் காவல்துறை அவசரம் அவசரமாகச் செயல்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தால் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ஆகவே இந்த சம்பவத்தையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் அப்போதுதான் உண்மைகள் வெளிப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story