உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாரான தி மு க பிரமுகர் வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாரான தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாரான தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர்
புதுவை உப்பளம் நேதாஜி நகர்-2 அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிராங்ளின் (வயது 59). பொதுப்பணித்துறை கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி குளோதினி. அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார்.
இந்தநிலையில் தற்போது புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு அந்த பகுதியில் பிராங்ளின் மக்கள் பணிகள் செய்து வந்தார்.
வெடிகுண்டு வீச்சு
இந்தநிலையில் இன்று மாலை 4 மணியளவில் பிளாங்ளின் வீட்டில் இல்லை. அவரது மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகள் மட்டும் இருந்தனர். அப்போது ஒரு ஸ்கூட்டரில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பிராங்ளின் வீடு அருகே சிறிது நேரம் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களில் ஒருவர் ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து பிராங்ளின் வீடு மீது அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வீசினார்.
அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
போலீசார் விரைந்தனர்
வீட்டின் முன்பக்கத்தில் கிரில் கேட் மூடி இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. முன்வாசல் பகுதியில் குண்டு வெடித்த சிதறல்கள் கிடந்தன. அந்த இடம் சேதமடைந்து காணப்பட்டது. வெடிமருந்து சிதறல்களும் கிடந்தன. வெடிகுண்டுகள் வீசப்பட்ட தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிராங்ளின் வீடு முன் திரண்டனர்.
இதுபற்றி அறிந்து போலீஸ் சூப்பிரண்டுகள் சுவேதா, சுபம் கோஷ் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். குண்டு வெடித்த இடத்தில் சிதறி கிடந்த தடயங்களை அவர்கள் சேகரித்தனர்.
தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோரும் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
கேமரா ஆய்வு
இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வந்த நிலையில் பிராங்ளினை மிரட்டும் வகையில் அவரது வீட்டில் வெடிகுண்டுகளை வீசி சென்றனரா? அல்லது தொழில் போட்டி காரணமாக வீசினார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் உப்பளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
===
Related Tags :
Next Story