சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் அகழாய்வு பணிகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்


சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் அகழாய்வு பணிகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 12 Feb 2022 2:44 AM IST (Updated: 12 Feb 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பண்டைத் தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் (கொந்தகை, அகரம், மணலூர்) 8-ம் கட்டம்; தூத்துக்குடி மாவட்டம் சிவகளை 3-ம் கட்டம்; அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் 2-ம் கட்டம்;

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை 2-ம் கட்டம்; விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை முதல் கட்டம்; நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி முதல் கட்டம்; தர்மபுரி மாவட்டம் பெரும்பாலையில் முதல் கட்டம் என 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் 20.1.2022 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க கீழடி அகழாய்வில், நகர நாகரிக கூறுகளை வெளிப்படுத்தும் நோக்கில் 8-ம் கட்ட அகழாய்வு நடைபெறும். சிவகளையில், தண் பொருநை ஆற்றங்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதிசெய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

மயிலாடும்பாறை அகழாய்வில், புதிய கற்கால மனிதர்கள் தங்களது வேளாண்மை நடவடிக்கைகளை தமிழகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர் என்பதனை நிரூபிக்க சான்றாக இத்தளம் அமையும். சோழப்பேரரசின் மாமன்னன் முதலாம் ராசேந்திரனின் தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

துலுக்கர்பட்டி அகழாய்வின் குறிக்கோள், செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவதாகும். நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்கால பண்பாட்டின் வேர்களை தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும்.

வெம்பக்கோட்டையில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னனியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகளை சேகரிப்பதாகும். பெரும்பாலை அகழாய்வின் நோக்கம், பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்கால பண்பாட்டின் வேர்களை தேடுவதாகும்.

அந்த வகையில் ஏற்கனவே அகழாய்வுகளை மேற்கொண்டு வரும் கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மட்டுமின்றி புதிதாக துலுக்கர்பட்டி, வெம்பக்கோட்டை, பெரும்பாலை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022- ம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வு பணிகளின் தொடக்கமாக, சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு ஆகிய 2 அகழாய்வு பணிகளை காணொலிக் காட்சி மூலம் தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிதியாண்டியில் ரூ.5 கோடி நிதியில் அந்த 7 தொல்லியல் அகழாய்வுகள், 2 களஆய்வுகள் மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண முன்கள புல ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story