நீட் தேர்வை வைத்து தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நீட் தேர்வை வைத்து தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது என்று கும்பகோணத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கும்பகோணம்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது தேர்தல் முடிவில் தெரிய வரும்.
ஆட்சி பலம், பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை எதிர்த்து தே.மு.தி.க. தனித்து களம் காண்கிறது. தே.மு.தி.க.விற்கு மக்கள் ஆதரவை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்.
தி.மு.க.வின் செயல்பாடுகள் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியிருப்பது, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை வழங்காமல் இருப்பது ஆகியவை பெண்கள் மத்தியில் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என கூறியிருந்த நிலையில் இன்று வரை நீட் தேர்வை நீக்கவில்லை. மாறாக நீட் தேர்வு விவகாரத்தை வைத்து அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனர்.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது உண்மை. மழை வெள்ள நிவாரணங்களுக்காக மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story