ஒரே குடும்பத்தில் 2 பேர் போட்டி: உள்ளாட்சியிலும் குடும்ப ஆட்சியை கொண்டுவர போகிறார்கள் - அண்ணாமலை பேச்சு


ஒரே குடும்பத்தில் 2 பேர் போட்டி: உள்ளாட்சியிலும் குடும்ப ஆட்சியை கொண்டுவர போகிறார்கள் - அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2022 6:18 AM IST (Updated: 12 Feb 2022 6:18 AM IST)
t-max-icont-min-icon

ஒரே குடும்பத்தில் 2 பேர் போட்டியிடுகிறார்கள். உள்ளாட்சியிலும் குடும்ப ஆட்சியை கொண்டுவரப்போகிறார்கள் என்று அண்ணாமலை பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க. கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவது, கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை கிழிப்பது, வாக்கு சேகரிக்க செல்லும் பா.ஜ.க. வேட்பாளர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஏனெனில் இன்றைக்கு பா.ஜ.க. மட்டும்தான் தமிழகத்தில், தி.மு.க. அரசு செய்யும் தவறை துணிவாக தட்டிக்கேட்டு ஊழலை தடுத்துக் கொண்டிருக்கிறது. ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் லட்சியம்.

கோபாலபுரம் மாடலை இப்போது தமிழகத்தில் பட்டி, தொட்டி எங்கும் கொண்டு சென்று நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் கொண்டு வந்து விட்டனர். கோபாலபுரத்தில் மட்டும்தான் ஒரு குடும்பம் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது என்றால் இப்போது நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் தங்கள் குடும்பத்தினர் பதவியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர், 3 பேர் போட்டியிடுகிறார்கள். உள்ளாட்சியிலும் குடும்ப ஆட்சியை கொண்டுவரப்போகிறார்கள். ஆனால் பா.ஜ.க.வினர் உங்களின் உணர்வுகளை முழுமையாக தெரிந்தவர்கள், அதையும் தாண்டி உங்களது வலியை தெரிந்தவர்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி தர வேண்டும் என்று சொன்னால் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story