பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்ற குற்றவாளி கைது


பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்ற குற்றவாளி கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 6:55 AM IST (Updated: 12 Feb 2022 6:55 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை போலீசார் ஓசூர் அருகே கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,
 
திருப்பூரில் தாராபுரம் சாலையில்  கடந்த 7-ந் தேதி ரத்தகரை படிந்த சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை நல்லூர் போலீசார் மீட்டு திறந்து பார்த்த போது அதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரை கழுத்தை நெரித்து கொன்ற நபர்கள், உடலை சூட்கேசில் அடைத்து வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து சூட்கேசை சாக்கடையில் வீசியது தெரிய வந்தது. கொலையான பெண்ணின் கையில் ஏ குயின் என்று டாட்டு பொறிக்கப்பட்டிருந்தது. போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.சி. நகரில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நேகா (30) என தெரிய வந்தது.

அவருடன் அபிதாஸ் (28), கி லால் சர்வா (27) எனற வாலிபர்கள் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அவர்கள் 2 பேரும் தலைமறைவானது தெரிய வந்தது.  இன்ஸ்பெகடர் சரவண ரவி தலைமையில் தனிப்படை கொலையாளிகளை தேடி வந்த நிலையில் அவர்களின் செல்போன் டவர் லோகேஷன் எந்த பகுதியில் உள்ளது என்பதை போலீசார் ஆராய்ந்தனர். அதில் லால் சர்வாவின் செல்போன் டவர் லோகேஷன் ஆராய்ந்ததில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. 

பின்னர் அங்கு விரைந்த தனிப்படையினர் லால் சர்வாவினை கைது செய்து விசாரணைக்காக திருப்பூருக்கு அழைத்து சென்றனர். மற்றொரு குற்றவாளியான அபிதாஸ் ஓசூர் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரையும் தேடி வருகிறார்கள்.

கைதான குற்றவாளி அசாம் மாநிலம் சிப்சாகர் கிராண்ட் சோனாரி அருகே உள்ள பாஜோ கானான் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story