வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “குமரிக்கடல் பகுதியின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (12-02-2022) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வடகடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
நாளை (13-02-2022) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், நீலகிரி , கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
14ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் வேளாங்கண்ணியில் 11 செ.மீ. மழையும், நாகையில் 10 செ.மீ. மழையும், பரங்கிப்பேட்டையில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று அதில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story