மற்ற கட்சிகளை போல் எண்ணிக்கைக்காக உறுப்பினர் சேர்க்கை நடத்தவில்லை காங்கிரஸ் தொழில்நுட்ப பிரிவு தலைவர் விளக்கம்
மற்ற கட்சிகளை போல் எண்ணிக்கைக்காக உறுப்பினர் சேர்க்கை நடத்தவில்லை என்று காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
புதுச்சேரி
மற்ற கட்சிகளை போல் எண்ணிக்கைக்காக உறுப்பினர் சேர்க்கை நடத்தவில்லை என்று காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
உறுப்பினர் சேர்க்கை
காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை விளக்க கூட்டம் மகாலட்சுமி திருமண நிலையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்துவது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எண்ணிக்கைக்காக...
உறுப்பினர் சேர்க்கையானது வாட்ஸ்-அப் மூலம் நடைபெறும். இந்த தகவல்கள் அனைத்தும் உடனடியாக அகில இந்திய தலைமைக்கு 5 நிமிடங்களில் கிடைத்து விடும். மற்றவர்களைப்போல் மிஸ்டு கால் மூலம் சேர்க்கை நடைபெறாது.
கட்சி உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். அதை கட்சி தலைமை சரிபார்த்தபின் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநில கட்சி தலைமை மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
மற்ற கட்சிகளைப்போல் எண்ணிக்கைக்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. நமது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட குவாலிட்டி (தரம்) முக்கியம் என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது. எனவே முறையான சரிபார்ப்புக்கு பின்னரே அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒரு லட்சம் உறுப்பினர்
பிரதேச தேர்தல் அதிகாரி ஹிபிஈடன் எம்.பி. பேசும்போது, புதுவையில் உள்ள 900 பூத்துகளிலும் உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும். ஆட்சி என்பது வரும் போகும். ஆனால் கட்சி நிலையாக இருக்கும். புதுவையில் ஒரு லட்சம் உறுப்பினர்களையாவது சேர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
நாராயணசாமி
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, உறுப்பினர் சேர்க்கையில் கட்சிக்காரர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் கிராமத்தில் பலரிடம் ஸ்மார்ட்போன் வசதியில்லை. எனவே சாதாரண போன் வைத்திருப்பவர்களும் உறுப்பினராக சேரும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான ஓ.டி.பி. வருவதற்கு தாமத மாவதால் இதற்கான மாற்று வழியை காணவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பிரதேச உதவி தேர்தல் அதிகாரி நிவேதித் ஆல்வா, உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் ஜான் அசோக், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்கா தரன், அனந்தராமன், உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளரும், மூத்த துணைத் தலைவருமான தேவதாஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story