22-வது மெகா முகாம்: ஒரே நாளில் 7.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி


22-வது மெகா முகாம்: ஒரே நாளில் 7.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 13 Feb 2022 3:00 AM IST (Updated: 13 Feb 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 22-வது மெகா தடுப்பூசி முகாமில் 7 லட்சத்து 36 ஆயிரத்து 708 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போடும் விதமாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த வாரம் 21-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 889 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) 22-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரிகள் என 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.

இந்த மெகா தடுப்பூசி முகாமில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 லட்சத்து 36 ஆயிரத்து 708 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 587 பேர் முதல் தவணையும், 5 லட்சத்து 69 ஆயிரத்து 744 பேர் 2-வது தவணையும், 27 ஆயிரத்து 377 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 566 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 91.17 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 71.32 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 27 லட்சத்து 14 ஆயிரத்து 965 பேருக்கு முதல் தவணையும், 9 லட்சத்து 8 ஆயிரத்து 772 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரத்து 19 பேருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story