டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் - அய்யாக்கண்ணு பேட்டி
கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
சென்னை,
விவசாய சங்கங்களின் கோரிக்கை மனுவை உணவு பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அளிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பல விவசாயிகள் வந்திருந்தனர். அதிகாரிகள் இல்லாத நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, விவசாய விளைபொருட்களுக்கு இருமடங்கு லாபம் தரும் விலையைத் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். நெல் கிலோ ரூ.18-க்கு விற்பதை ரூ.54 ஆக உயர்த்தித் தருவதாக கூறினார். ஆனால் அதைக் கொடுக்கவில்லை. கரும்பு டன்னுக்கு ரூ.2,700-ல் இருந்து ரூ.8,100 அதிகரித்து தரப்படும் என்றார். தற்போது ரூ.200 மட்டும் உயர்த்திக் கொடுத்துள்ளார்.
அதுபோல நெல்லுக்கு ரூ.18-ல் இருந்து ரூ.20 ஆக விலை உயர்த்தி தந்துள்ளார். அதையும் நாங்கள் விற்கச் சென்றால் கிலோவுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். அதனால் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளோம்.
கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு அங்குள்ள பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து முயற்சி செய்கிறார்கள். அதைக் கட்டிவிட்டால் தமிழகத்திற்கு 177 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பது கஷ்டமாகிவிடும்.
எங்களிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஆண்டுக்கு 1,660 டி.எம்.சி தண்ணீர் கோதாவரி ஆற்றில் இருந்து கடலுக்கு செல்கிறது. அதிலிருந்து 200 முதல் 300 டிஎம்சி தண்ணீரை காவிரியில் தமிழகத்திற்கு திருப்பி விடுவோம் என்றார். அதனால் பாலாறு, தென்பெண்ணையாறு, வைகை, குண்டாறுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். அப்படி அவர் கூறி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எங்களுக்கு நெல்லுக்கு லாபகரமான விலையும் தரவில்லை. கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கவில்லை. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. வேட்டி, துண்டை பறித்துவிட்டார்கள். கோவணத்தையும் பறித்துவிடாதீர்கள் என்று கூறுவதற்காக, டெல்லிக்கு சென்று போராட இருக்கிறோம். லாபகரமான விலை கொடுக்கும் வரை நாங்கள் டெல்லியில் இருந்து திரும்பமாட்டோம்.
நெல், கரும்பு விலையை நிர்ணயம் செய்யும் கமிஷன் டெல்லியில் இருப்பதால் அங்கு போய் போராட உள்ளோம். எனவே எங்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் செய்யும்போது கிலோவுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கேட்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளோம். இதற்காக தமிழகத்தில் இருந்து 200 விவசாயிகள் செல்கிறோம். பிற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வந்து இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story