தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்திடுக : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்திடுக : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 13 Feb 2022 5:33 PM IST (Updated: 13 Feb 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த   மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, தமிழக முதல் அமைச்சர் மு.க  ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “12.02.2022 அன்று, IND-TN-10-MM-612 மற்றும் IND-TN-10-MM-328 ஆகிய பதிவெண்களைத் தாங்கிய இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், 13.02.2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளனர்.இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் . கொரோனா தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் (JWG) மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துகிறேன்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகை செய்திட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுப்படுத்துங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story