ரூ 1½ கோடியில் பாகூரில் புதிய பஸ் நிலையம்


ரூ 1½ கோடியில் பாகூரில் புதிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 13 Feb 2022 10:41 PM IST (Updated: 13 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

பாகூரில் ரூ.1½ கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாகூரில் ரூ.1½ கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பஸ் நிலையம்
பாகூரில் வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பஸ் நிலையம் இல்லாத காரணத்தால், பொது மக்கள் மழை, வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையம் அமைப்பதற்காக பாகூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் கடந்த பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாகூரில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று கூறினார். இதற்காக ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 68 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பூமிபூஜை
இதையடுத்து பாகூரில் பஸ் நிலையம் அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது.     செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி பஸ் நிலையம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து       தொடங்கி வைத்தார்.
விழாவில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு செயற்பொறியாளர் பாஸ்கர், உதவிப் பொறியாளர் சுந்தரராஜ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
511 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ள இந்த பஸ் நிலையமானது பொது மக்களுக்கு   தேவையான அனைத்து அடிப்படை வசதி களுடன் அமைய உள்ளது. இதன்  மூலமாக   பாகூர், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு, குருவிநத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் பெறுவார்கள். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி
இதுகுறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:- பாகூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடை வீதிகளில் பஸ்கள் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பாகூரில் பஸ்நிலையம் அமைப்பதற்காக பூமிபூஜை நடந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். 9 மாதங்களில் பஸ் நிலையத்தை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகூர் வளர்ச்சியின் அடையாளமாக இந்த பஸ் நிலையம் அமையும். இதன் மூலம் பாகூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story