கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
மாநாடு
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் வட தமிழக 27-வது மாநில மாநாடு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் தலைமை தாங்கினார். வட தமிழக செயலாளர் கவுசிக் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முயற்சிகள்
நான் பா.ஜ.க.வை எதிர் அணியில் இருந்து பார்த்து வந்தேன். தற்போது பா.ஜ.க.வில் இணைந்த பின்னர் தான் ஒரு கட்சி, ஒரு அமைப்பை எவ்வாறு நடத்த முடியும் என்பது தெரிகிறது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராது பணியாற்றி வருகிறார். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த நாடு முன்னேற்றம் அடைந்ததாக கருதப்படும். இந்தியாவை சுயசார்புடைய நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்திற்காக புதுச்சேரி வந்த பிரதமர் மோடி பெஸ்ட் புதுச்சேரி என மாற்றப்படும் என்று கூறினார். தற்போது புதுவையில் அமைந்துள்ள தேசிய ஜன நாயக கூட்டணி அதே எண்ணம், நோக்கத்துடன் பயணிக்கிறது. மத்திய அரசு புதுவை மாநிலம் வளர்ச்சி அடைய தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
புதுவை கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் தற்போது கொண்டு வரப்படுகிறது. நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்மானம்
மாநாட்டில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நீட் தேர்வை வைத்து தமிழக அரசு போடும் இரட்டை வேடத்தை பற்றியும், கல்வி நிலையங்களில் அனைத்து மாணவ-மாணவிகள் சீருடை அணிவதில் வேறுபாட்டை உருவாக்கும் அமைப்புகளை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story