தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு பிரசாரம்
சென்னையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு பிரசாரம் செய்தார்.
சென்னை,
சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட உட்வார்ப் பகுதியில் 1,800-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. குடிசை வீடுகள் நிறைந்த இப்பகுதியில் 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் சேகர்பாபு ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய துணைக்கண்டத்துக்கே வழிகாட்டியாக, கொரோனா பாதிக்கப்பட்டோரை அவர்கள் தங்கியிருந்த வார்டுகளுக்கே சென்று பார்த்து நலம் விசாரித்து, டாக்டர்கள் மற்றும் மக்களுக்கும் உந்துசக்தியாக திகழ்ந்தவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்தவகையில் கொரோனா பாதிப்பை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, பெருவெள்ளம் தமிழகத்தை மிரட்டியது.
வெள்ளம் ஓய்ந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவல் வேகமெடுத்தது. இவை அனைத்திலும் துரித நடவடிக்கைகளை கையாண்டு மக்களை பாதுகாப்பு இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகம் தாண்டி, அண்டை மாநிலங்கள் வரை ‘முதன்மையான முதல்-அமைச்சர்’ என்ற பாராட்டை, மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார்.
தன்னடக்கம் மிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பீடுநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.
என்றைக்குமே சென்னையை பொறுத்தவரை இது தி.மு.க.வின் கோட்டை தான். சென்னையில் உள்ள 3 எம்.பி.க்களும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளடங்கிய 22 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.தான். ஆட்சி-அதிகாரம் தி.மு.க.வின் கையில்தான். ஒரு கட்சியின் கீழ் ஆட்சி அதிகாரமும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் இருக்கும் நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டால் மாநகர மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேறும்.
சென்னை மாநகர மக்கள் மிகவும் தெளிவானவர்கள். இந்த 8 மாத தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதை போல, 200 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள்.
தனது கனவான சிங்கார சென்னையாக இந்த மாநகரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக்காட்டுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story