செருப்பு கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


செருப்பு கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Feb 2022 5:51 AM IST (Updated: 14 Feb 2022 5:51 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் செருப்பு கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே செருப்புகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் பைசு. கடந்த 7-ந் தேதி இவரது கடைக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த லோகேஷ் (வயது 25) என்பவர் செருப்பு வாங்குவதற்காக வந்தார்.

அவர் கடையில் இருந்த ரூ.1,500 மதிப்புள்ள செருப்பை வாங்கி சென்றார். இதைத்தொடர்ந்து மீண்டும் கடைக்கு வந்த அந்த நபர் தனக்கு அந்த செருப்பு வேண்டாம். அதற்கான தொகை யை திரும்ப தாருங்கள் என்று கூறினார். அப்போது கடை உரிமையாளர் பைசு, மாற்று செருப்பு தருவதாகவும், பணத்தை திரும்ப தர இயலாது எனவும் கூறினார். இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது லோகேசை பைசுவின் நண்பர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் 2 தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பைசு கடையை திறக்க வந்தார். அப்போது லோகேஷ் கையில் அரிவாளுடன் அங்கு காத்திருந்தார். பின்னர் அவர் பைசுவின் முதுகில் அரிவாளால் வெட்டினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பைசு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் லோகேஷ் விடாமல் அவரை துரத்தி சென்று ஓட ஓட பைசுவின் தோள்பட்டை, கை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதை அங்கிருந்தவர்கள் கவனித்து பைசுவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் வெளியே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில், பைசுவை லோகேஷ் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோக்களை போலீசார் சேகரித்து, லோகேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story