அத்தையை கொலை செய்து புதைத்த மருமகன்...! விசாரணையில் அதிர்ச்சி தகவல்


அத்தையை கொலை செய்து புதைத்த மருமகன்...! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 14 Feb 2022 12:48 PM IST (Updated: 14 Feb 2022 1:01 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூரில் அத்தையை கொலை செய்து ஏரிப்பகுதியில் புதைத்த மருமகன் கைதுசெய்யப்பட்டார்.

தஞ்சை,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே  சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த 1-ம்  தேதி புதைக்கப்பட்ட உடல் ஒன்றின் கை மட்டும் வெளியே தெரிவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார்  அங்கு சென்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

இதில் அந்த பெண், திட்டக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த இளங்கோவனின் மனைவி அன்னபூரணி(55) என்பது தெரியவந்தது.

மேலும், அவர் அணிருந்த நகைகள் இல்லாததால் நகைக்காக யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார்  விசாரணை செய்தனர். மேலும் கொலை நடந்து 15 நாட்கள் ஆகியும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவரின் உறவினர்களிடம் போலீசார்  தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில்,  அன்னபூரணி புதைக்கப்பட்ட இடத்தில் சில நாட்களில் இருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, அன்னபூரணியின் அண்ணன் மகன் முருகானந்தம் (வயது 30) என்பவரின் செல்போன் எண்ணும் காட்டியது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் அன்னபூரணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அன்னபூரணி பெயரில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகள் பட்டுக்கோட்டையில் உள்ளது. அந்த சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு முருகானந்தம் அத்தை அன்னபூரணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அன்னபூரணியை அடித்து கொலை செய்து, அன்றிரவு அவரது உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து தனி நபராக நான்கு கிலோ மீட்டர் தூரமுள்ள ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story