நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 35 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Feb 2022 8:40 PM IST (Updated: 14 Feb 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் 35 பேர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை, 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேர்தல் பணியாற்றுகின்ற காரணங்களால், அதிமுக-வில் இருந்து 35 பேர் நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கன்னியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் , நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேட்புமனுக்களை வாபஸ் பெறுதல், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் முதலான காரணங்களால் 35 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுகின்றனர். 

அதன்படி, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர், திருச்சி மாநகர், மதுரை மாநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை புறநகர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் 35 பேர், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  




Next Story