திருப்பூரில் செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு வாலிபர் தலை துண்டித்து படுகொலை


திருப்பூரில் செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு வாலிபர் தலை துண்டித்து படுகொலை
x
தினத்தந்தி 15 Feb 2022 2:37 AM IST (Updated: 15 Feb 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் செல்போன், பணத்தை பறித்துக்ெகாண்டு வாலிபரை தலை துண்டித்து படுகொலை செய்த 5 பேர் கும்பல், அவரது நண்பரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

வாலிபர்

மயிலாடுதுறை மாவட்டம் போனேரிராஜபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 23). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் திருப்பூரில் ஒரு எம்பிராய்டரிங் நிறுவனத்தில் தங்கி அங்கேயே வேலை செய்து வந்தார். இவருடன் திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த தனபால் மகன் ரஞ்சித் (22) என்பவரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால் நண்பர்களாயினர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சதீஷ்குமாரும், ரஞ்சித்தும் செரங்காடு காட்டுப்பகுதிக்கு இரவு மது குடிக்க சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அவர்களை வழிமறித்தனர். செல்போன் மற்றும் பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். ஆனால் அவர்கள் கொடுக்க மறுக்கவே அந்த கும்பல் அவர்கள் 2 பேரையும் கடுமையாக தாக்கினர்.

கத்திக்குத்து

அந்த கும்பல் ரஞ்சித்தை ஆயுதத்தால் தாக்கி, வயிற்றில் கத்தியால் குத்தினர். இதனால் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பி வந்த ரஞ்சித் ஒரு நிறுவனம் முன்பு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியின் நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சித்தை மீட்டு ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது ரஞ்சித் போலீசாரிடம், என்னை கத்தியால் குத்திய கும்பல் எனது நண்பர் சதீஷ்குமாரை பிடித்து வைத்து தாக்குகிறது. அவரை வழிப்பறி கும்பலிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்றார். இதையடுத்து சதீஷ்குமாரை மீட்க போலீசார் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர்.

தலை துண்டித்து படுகொலை

அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. சதீஷ்குமார் உடல் மட்டும் கிடந்தது. அவருடைய தலையை காணவில்லை.

வழிப்பறி கும்பல் சதீஷ்குமாரிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு, அதன்பின்னர் அவருடைய தலையை துண்டித்து படுகொலை செய்து உடலை அங்கேயே போட்டு விட்டு, தலையை கொண்டு சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமார் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவு நேரம் ஆகி விட்டதால் தேடுதல் பணியை போலீசார் கைவிட்டனர். பின்னர் சதீஷ்குமாரின் உடலை மட்டும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

நேற்று இரவு வரையும் சதீஷ்குமார் தலை கிடைக்கவில்லை. இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story