டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லிக்கு போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள்
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி மற்றும் லக்னோவில் போராட்டம் நடத்தும் எண்ணத்துடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 70 தமிழக விவசாயிகள் நேற்று காலை ரெயில் மூலம் டெல்லி சென்றனர்.
இதுபற்றி முன்கூட்டியே அறிந்திருந்த டெல்லி போலீசார் அவர்களை டெல்லி ரெயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினார்கள். “டெல்லியிலும் போராட அனுமதி கிடையாது, டெல்லியில் இருந்து லக்னோ செல்லவும் அனுமதி இல்லை” என கூறினர்.
ஆர்ப்பாட்டம்
இதனைத்தொடர்ந்து விவசாயிகள் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சில விவசாயிகள் தங்களது கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்க விட்டிருந்தனர். 2 பெண்கள், மாராப்பு கட்டி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீசார் அவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி நிஜாமுதீன் ரெயில் நிலையம் அழைத்துச் சென்று, அங்கிருந்து ரெயிலில் தனிப்பெட்டி ஏற்பாடு செய்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
அனுமதிக்க மறுப்பு
முன்னதாக அய்யாக்கண்ணு பேட்டி அளிக்கையில், “கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது உத்தரபிரதேசத்தில் நாங்கள் பிச்சை எடுத்து போராடினோம். அப்போது உள்துறை மந்திரி எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு பெரும்பாலானோர் இந்துக்கள், அந்த இந்து விவசாயிகளையே காப்பாற்றாத பிரதமர் எல்லா மக்களையும் எப்படி காப்பாற்றுவார்? என்பதை தெரியப்படுத்த லக்னோ செல்ல இருந்தோம். ஆனால் போலீசார் எங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்” என்றார்.
Related Tags :
Next Story