காதலர்தினம் கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் திரண்ட காதல் ஜோடிகள்
காதலர் தினத்தையொட்டி, நேற்று காதலர்கள் பரிசு பொருட்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள். மெரினா கடற்கரையில் ஏராளமான காதலர் ஜோடிகள் திரண்டனர்.
சென்னை,
பிப்ரவரி மாதம் என்றாலே காதலர் தினம் தான் சட்டென மனதில் தோன்றும். காதலர் தினம் என்று வந்தாலே, மனதில் இனம் புரியாத ஒரு உற்சாகம் பிறப்பதை யாராலும் உணராமல் இருக்கமுடியாது. எத்தனையோ வரலாறுகள் காதலர் தினத்துக்கு உதாரணமாக கூறப்பட்டாலும், ரோமாபுரியில் அரச கட்டளையை மீறி விரும்பும் நெஞ்சங்களை ஒன்று சேர்த்து அதனால் கொலை செய்யப்பட்ட வேலண்டைன் எனும் பாதிரியார்தான் முதலில் நம் நினைவுக்கு வருவார்.
காதல் என்பது எப்போதுமே அழகானது. அதனால் எழும் கனவுகளும், நினைவுகளும் என்றுமே சுகமானது. இதனாலேயே காதலர் தினத்தன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடும். காதல் என்றாலே அன்புதான். அந்த அன்பை பாராட்ட வயது ஒரு விஷயமல்ல. இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் நிற்காத கடல் அலையாய், காதலர் தினம் ஆர்ப்பரித்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா சூழலிலும் உலகம் எங்கும் காதலர் தினம் நேற்று உற்சாகமாகவே கொண்டாடப்பட்டது.
தமிழகத்திலும் காதலர் தின கொண்டாட்டங்கள் உற்சாகமாக அரங்கேறின. காதல் ஜோடிகளின் வானம்பாடியாக திகழக்கூடிய சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தன. கடற்கரை மணற்பரப்பில் ஜோடியாக சுற்றியும், பொங்கி வரும் கடல் அலையில் கால் நனைத்து விளையாடுவதுமாக காதலர்கள் பொழுதை கழித்தனர்.
அதேபோல ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்களிலும் காதல் ஜோடிகளின் நடமாட்டத்தை அதிகமாக காணமுடிந்தது. இதுதவிர கோவில்களிலும் நேற்று காதல் ஜோடிகள் தங்கள் காதல் கைகூட மனமுருக வழிபாடுகளில் ஈடுபட்டதையும் பார்க்கமுடிந்தது. இப்படி சென்னை நகர் முழுவதும் நேற்று காதலர்கள் உற்சாகத்துடன் நடைபோட்டதை காணமுடிந்தது. அதேபோல பஸ்களிலும், மின்சார ரெயில்களிலும் காதலர்கள் நிறைந்திருந்தனர். பரிசு பொருட்கள் வழங்குவதும், வாங்குவதுமாக நேற்று தேனை கண்ட கரடிகளாக காதலர்கள் உற்சாக துள்ளலுடன் திரிந்ததை பார்க்க முடிந்தது.
காதல் ஜோடிகளுக்கு மட்டும்தான் காதலர் தினமா? என்ற ரீதியில் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகளும் நேற்று கோதாவில் குதித்தனர். இதனால் இளம் ஜோடிகளுக்கு சமமாக புதுமண தம்பதிகளின் நடமாட்டமும் அதிகளவில் காணப்பட்டது. கணவன் விரும்பும் பரிசு பொருட்களை மனைவியும், மனைவி ரசிக்கும் பரிசை கணவரும் ஆர்வமுடன் வாங்கித்தந்தனர். இதனால் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.
அப்படி என்னதான் இந்த காதலர் தினத்துக்கு உண்டோ... என்று மனதுக்குள் ‘சீன்’ போட்டாலும் நடுத்தர வயதினரும் தங்கள் வாழ்க்கை துணைக்கு காதலர் தின வாழ்த்தை நாசுக்காக சொல்லி மகிழ்ந்தனர். இதய வடிவில் இட்லியையும், தோசையையும் வெட்டி தங்கள் கணவர்களுக்கு சாப்பிட கொடுத்து, மனைவிமார்கள் மகிழ்ந்தனர்.
காதல் திருமணம் செய்தோர் தங்கள் வீடுகளில் காதலர் தின ‘கேக்’குகள் வாங்கி காதலர் தினத்தை ரம்மியமாகவும் கொண்டாடினர். எதிர்பாராத பரிசுகள் தந்து தங்கள் துணையை ஆச்சரியம் கொள்ள செய்தனர்.
வயதானோர் கூட தங்கள் வாழ்விணையரை பார்த்து கண்களால் பேசி, உள்ளத்திலேயே சிரித்து உவகையுடன் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். மரணத்தின் வாசல் முன்பே தெரிந்தால், மனிதன் இறைவனை விரும்பமாட்டான். காதலும் அப்படித்தான். எப்போது வரும், எப்படி வரும்? என்று யாருக்கும் தெரியாது. யாராலும் சொல்லவும் முடியாது. காதல் எப்போதும் வரும். எப்படியும் வரும். அந்தவகையில் ஒவ்வொரு மனதிலும் இதய கதவுகளை உடைத்து உள்ளத்தை எட்டி பார்த்தது காதல்.
என்னதான் காதலர் தினம் என்றாலும், அந்த கூத்தும், மகிழ்ச்சியும் ஒரு நாளில் முடிந்துவிடக்கூடாது. உண்மையான காதல் என்பதே விட்டுக்கொடுக்காத அன்புதான். ‘ஆண்டில் ஒரு நாள் காதலை மதிப்பது மேலை நாட்டினர் பழக்கம். வாழ்வே காதலாய் வாழ்ந்து கழிவதே நம் நாட்டவர் வழக்கம். காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு...’, என்ற கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளே இதற்கு சான்று. எனவே காதலில் ஜெயிப்பது மட்டும் வெற்றியல்ல, ஆயுள்வரை தோற்காமல் இருப்பதே உண்மையான வெற்றி. கொண்டாடுவோம், காதலை.
Related Tags :
Next Story