பப்ஜி மதனின் மனைவி தாக்கல் செய்த மனு - ஐகோர்ட்டில் தள்ளுபடி


பப்ஜி மதனின் மனைவி தாக்கல் செய்த மனு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 15 Feb 2022 12:47 PM IST (Updated: 15 Feb 2022 12:47 PM IST)
t-max-icont-min-icon

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சென்னை,

ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2021 ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் அவருக்கு எதிராக பண மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்த நிலையில், பப்ஜி மதனை சைபர் சட்ட குற்றவாளி என அறிவித்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, ஐகோர்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கிருத்திகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7 மாதத்திற்கு மேலாக பப்ஜி மதன் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

ஆனால் அரசு தரப்பில் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. உடல்நிலையை காரணம் காட்டி முன்கூட்டியே விசாரணை கேட்பதாகவும், ஆனால் மதனின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், பிசொயோதரபி சிகிச்சை மட்டுமே தேவைப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. 

இதையடுத்து நீதிபதிகள், மதனின் பேச்சு நச்சுத்தன்மை உடையதாக இருக்கிறது என்றும் அவரை ஏன் வெளியில் விட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அதை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்று சொல்லி மதனின் மனைவி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story