திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
3 மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி முதல் திருப்புதல் தேர்வு கடந்த 9-ந்தேதி மாணவர்களுக்கு தொடங்கியது. இதில் 10-ந்தேதி நடைபெற இருந்த தேர்வை தவிர, மற்ற 3 நாட்களில் தேர்வு நடந்து முடிந்து இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு, 12-ம் வகுப்பு கணிதம் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த வினாத்தாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வெளியாகிய விவரங்கள் நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த நிலையிலும் அதே தேர்வுத்தாளை கொண்டு தேர்வு நடத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை, திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவும் 3 மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story