சுகாதார ஊழியர்களுடன் அரசு செயலாளர் பேச்சுவார்த்தை பதவி உயர்வு படிகளை உயர்த்தித்தர உறுதி


சுகாதார ஊழியர்களுடன் அரசு செயலாளர் பேச்சுவார்த்தை பதவி உயர்வு  படிகளை உயர்த்தித்தர உறுதி
x
தினத்தந்தி 15 Feb 2022 7:51 PM IST (Updated: 15 Feb 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

சுகாதார ஊழியர்களுடன் அரசு செயலாளர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பதவி உயர்வு, படிகளை உயர்த்தி தர உறுதி அளிக்கப்பட்டது.

புதுச்சேரி
சுகாதார ஊழியர்களுடன் அரசு செயலாளர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பதவி உயர்வு, படிகளை உயர்த்தி தர உறுதி அளிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

புதுவையில் உள்ள அனைத்து பிரிவு சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் தலைமையில் சிறப்பு பணி அதிகாரி சாவித்திரி, சார்பு செயலாளர் புனிதமேரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன ஆலோசகர் பிரேமதாசன், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் கீதா, பொதுச்செயலாளர் முனுசாமி, செயலாளர்கள் ஜவகர், கலைவாணி, அமைப்பு செயலாளர்கள் ஜெகநாதன், மணிவண்ணன், பொருளாளர் கிரி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பதவி உயர்வு

தலைமை செயலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி நோயாளி கவனிப்புப்படி மற்றும் செவிலியர் படி ஆகியவற்றை உயர்த்தி வழங்க கோப்பு தயார் செய்து நிதித்துறைக்கு அனுப்புவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் துணை செவிலிய கண்காணிப்பாளர், செவிலிய கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளை நிரப்பவும், தொழில்நுட்ப உதவியாளர், சுகாதார ஆய்வாளர்கள், பெண் சுகாதார மேற்பார்வையாளர், நர்சிங் ஆர்டலி, வார்டு அட்டெண்ட் காலி பணியிடங்களை இன்னும் 2 வாரத்தில் பதவி உயர்வு மூலம் நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டது.
தகுதிவாய்ந்த அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் காலகட்ட பதவி உயர்வு வழங்கவும், புதிய பணியிடங்களை உருவாக்கவும், பணிக்காலத்தில் மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆஷா ஊழியர்கள்

தேசிய கிராமப்புற சுகாதார இயக்க ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆஷா ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story