வெடிகுண்டு நடமாட்டம் தடுக்கப்படும் போலீஸ் ஏ டி ஜி பி ஆனந்த்மோகன் உறுதி


வெடிகுண்டு நடமாட்டம் தடுக்கப்படும் போலீஸ் ஏ டி ஜி பி  ஆனந்த்மோகன் உறுதி
x
தினத்தந்தி 15 Feb 2022 10:26 PM IST (Updated: 15 Feb 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு நடமாட்டம் தடுக்கப்படும் என்று போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் கூறினார்.

புதுச்சேரி
வெடிகுண்டு நடமாட்டம் தடுக்கப்படும் என்று போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் கூறினார்.

அலையில் சிக்கிய மாணவர்கள்

கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான விஷ்ணு (வயது 22), சபரிஷ் (24) ஆகியோர் புதுவை வந்து தலைமை செயலகம் எதிரே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த கடலோர காவல்படையை சேர்ந்த போலீஸ்காரர் சவுந்தரராஜன், கடலில் குதித்து மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்தார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து போலீஸ்காரர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்தநிலையில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் போலீஸ்காரர் சவுந்தரராஜனை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உடனிருந்தார்.
அதைத்தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எழுத்து தேர்வு

புதுவைக்கு வந்து கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை போலீஸ்காரர் சவுந்தரராஜன் காப்பாற்றியுள்ளார். இதுபோல்தான் போலீசார் பணியாற்ற வேண்டும்.
புதுவை காவல்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது உடல் தகுதி தேர்வுகள் முடிந்து உள்ளன. அடுத்ததாக எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அதன்பின் ஊர்க்காவல் படைவீரர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டு வெடிகுண்டு

புதுவையில் ஒரு சில சம்பவங்களில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. வெடிகுண்டு நடமாட்டம் தடுக்கப்படும். அதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு தயாரிக்கும் நபர்களை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story