3 வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்பீர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
விவசாயிகளை தரகர்கள் என்று சொன்னதற்கும், 3 வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்காகவும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பீர்களா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரசாரம்
தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இருந்தவாறு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
போராடி வளர்த்த மாவட்டம்
கருணாநிதி போராடி போராடி வளர்த்த மாவட்டம் தஞ்சாவூர். காவிரி நீரை பங்கிடுவதில், கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரச்சினை வந்தபோதே, அதாவது 1970-ம் ஆண்டே காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக கருணாநிதி வைத்தார். காவிரி நதிநீர் ஆணையம் அமைய காரணமாக இருந்தவரும் கருணாநிதிதான். இறுதி தீர்ப்பை பெற வழக்கை விரைந்து முடிக்க பாடுபட்டதும் கருணாநிதி ஆட்சிதான். காவிரி இறுதி தீர்ப்பும் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் 2007-ம் ஆண்டு வந்தது.
முதல்-அமைச்சர் என்பதைவிட, கருணாநிதியின் புதல்வன் என்ற உரிமையோடும், பெருமையோடும் காவிரி மண்ணுக்கும், விவசாயிகளுக்கும் நான் துணை இருப்பேன். 2017-ம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விவாதம் வந்தபோது, தமிழ்நாடு அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. அந்த நிலையில் வழக்கின் இறுதித்தீர்ப்பு 2018-ம் ஆண்டு வந்தது. அதில், 14.75 டி.எம்.சி. நீரை கோட்டை விட்ட ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக, நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும். கர்நாடக மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு இதனை செயல்படுத்தவில்லை.
மன்னிப்பு கேட்பீர்களா?
‘பல்லக்கு தூக்கி’யாக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிய அரசை தட்டிக்கேட்கவில்லை. ஆனால் உடனே காவிரி ஆணையம் அமைக்கவேண்டும் என்று போராடியதும் தி.மு.க.தான். டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, 3 வேளாண் சட்டங்களை ஆதரிச்சு வாக்களித்ததன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கே துரோகியாக விளங்கியவர்தான் ‘பாதம் தாங்கி’ எடப்பாடி பழனிசாமி. அவரை ‘பா.ஜ.க.’ பழனிசாமி என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு பா.ஜ.க. வாய்ஸில் ‘மிமிக்ரி’ செய்துகொண்டு இருக்கிறார். விவசாயிகளுக்கு நாள்தோறும் துரோகத்தை மட்டுமே செய்தவர் எடப்பாடி பழனிசாமி.
3 வேளாண் சட்டங்களை தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒன்றிய அரசு பணிந்து 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சட்டத்தை கொண்டுவந்து விவசாயிகளை வஞ்சிக்க நினைத்த பிரதமர் மோடியே பின்வாங்கி, விவசாயிகளின் நெஞ்சுரத்தின் முன்பு தோல்வியடைந்து நிற்கிறார். இறுதியில் உண்மைதான் வென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் தலையில் போட நினைத்த துண்டு, அவரது தலையிலேயே விழுந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு ஆபத்து என்றால் ஓடோடி வந்து முட்டுக்கொடுத்து, ‘டப்பிங்' பேசும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன். போராடிய விவசாயிகளை ‘தரகர்கள்’ என்று கொச்சைப்படுத்தியதற்கும், 3 வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கும், விவசாயிகளுக்கு செய்த துரோகத்துக்கும் மன்னிப்பு கேட்பீர்களா?.
நான் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு காணொலி வழியாக பிரசாரம் செய்வதை சிலர் குறை சொல்கிறார்கள், விமர்சனம் செய்கிறார்கள். நாள்தோறும் மக்களோடு மக்களாக இருக்கும் நான் நேரடி பிரசாரம் செய்தால் கூடுகின்ற கூட்டத்தை பார்த்து, அவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்.
வெற்றியை தாருங்கள்
நாள்தோறும் கோட்டையில் பணிகளை முடித்துவிட்டு மாலையில் காணொலி வாயிலாக சந்தித்து, நம்முடைய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு ஆதரவு கேட்கிறேன். சிலர் கடந்த காலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை பிரசாரத்துக்கு அனுமதிக்காமல், ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அவர்கள் மட்டும் பிரசாரத்துக்கு சென்றார்கள். மக்கள் ஆதரவு தந்தார்களா? ‘ரிசல்ட்' என்ன ஆனது? நியாபகம் இருக்கிறதா? பச்சை பொய்களை கூறி அனைவரையும் ஏமாற்றிட முடியாது என்பதை எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் காமெடி நாடக கம்பெனி உணரவேண்டும். இப்போதும் மக்கள் அதை உணர்த்தத்தான் போகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும், ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கொடுத்த சவுக்கடியை, தண்டனையை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு தாருங்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும், ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கொடுத்த வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுக்கு தாருங்கள். அதை முழுமையான வெற்றியாக தாருங்கள். சமூக விரோத கட்சிகளை தூக்கி எறிந்து தி.மு.க.வுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களித்து மாபெரும் வெற்றியை தாருங்கள். விரைவில் வெற்றிவிழாவின்போது நேரில் சந்திப்போம். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது தஞ்சை மாவட்டத்தில்தி.மு.க. அரசு செய்த சாதனை களையும் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.
Related Tags :
Next Story