வெளிநாட்டில் வேலை... ‘கடைசி நேரத்தில் தரும் விசாவை நம்ப வேண்டாம்’ - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்


வெளிநாட்டில் வேலை... ‘கடைசி நேரத்தில் தரும் விசாவை நம்ப வேண்டாம்’ - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
x
தினத்தந்தி 16 Feb 2022 11:09 AM IST (Updated: 16 Feb 2022 11:09 AM IST)
t-max-icont-min-icon

கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து தரும் விசாக்களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல வேண்டாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் தர்மா என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சிலர் தன்னை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், படித்த பட்டதாரி பொறியாளர்களுக்கு வெளிநாடுகளில் தினக்கூலி வேலை வாங்கிக் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. 

இந்த வழக்கில் முதல் குற்றவாளி ரவிக்குமார் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறும் நபர்களிடம் பணத்தைக் கொடுக்க வேண்டாம் என தெரிவித்தார். 

மேலும் தரகர்கள் கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து தரும் விசாக்களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் பயணத்திற்கு முன்பே விசாவினை பெற்று சம்பந்தப்பட்ட குடிபெயர்வோர் அலுவலகத்தை அணுகி அதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முறையாக விசாரணை செய்யாமல் முகவர்களிடம் பணத்தையோ, பாஸ்போர்ட்டையோ கொடுக்க வேண்டாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story