“விதிகளை மீறி போஸ்டர் ஒட்ட அனுமதிக்கக் கூடாது” - சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு


“விதிகளை மீறி போஸ்டர் ஒட்ட அனுமதிக்கக் கூடாது” - சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Feb 2022 12:40 PM IST (Updated: 16 Feb 2022 12:40 PM IST)
t-max-icont-min-icon

விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சியின் 117 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், தனது போஸ்டர் மீது திமுக ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியதாகவும், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுவதற்கு தடை உள்ளதாக தெரிவித்தார். 

இதையடுத்து விதிகளை மீறி போஸ்டர் ஒட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தேர்தலின் பெயரால் நகரை குப்பைக்காடாக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த உத்தரவை மீறிபவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் அனுமதியின்றி வேட்பாளர்கள் போஸ்டர் ஒட்டக்கூடாது என விளம்பரம் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 21 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story